Tuesday, June 10, 2025

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது



நான் 
கொஞ்சம்
புண்ணியம்
செய்தவன்
தான்! 
ஆனால்
அதோ அங்கே 
நண்பா நீ,
அந்தோ....
தெரு ஓரத்தில்
ஜோதிடனின்
கூண்டிலிருந்து
வெளிவந்து
அர்த்தமற்ற
அட்டையை
பொறுக்கித் 
தந்துவிட்டு
அவன் காட்டும்
கொட்டையை
கடனே எனக்
கவ்வி
சட்டென 
மீண்டும்
அரை அடி 
அல்ப்பச் 
சிறைக்குள் ,
பறப்பதை
மறந்து
பிறப்பை
நொந்து 
வாழ.....

....
அட, கேடுகெட்ட
மானிடா, 
அவன் 
பொறுக்கிய
அட்டையில்
உனக்கு
அதிர்ஷ்டம்
கொட்டோ
கொட்டு
என்றா 
கொட்டும் ?
அவனால் 
அவனுக்கே
விமோசனம்
இல்லையே
உனக்கு
மட்டும் என்ன
பண மழை
பொழியவா
போகுது
நண்பனுக்கு
சிறகில்லை
நானோ சிறகு 
இருந்தும் 
பறப்பதில்லை
என்று தணியும்
எங்கள் 
சுதந்திர தாகம், 
பாரதிக்கே 
தீரவில்லை
நாங்கள்
எம்மாத்திரம்!

 கூண்டுக்கிளி 


என் சிறகுகள் வெட்டாமலே 
சிதைக்க படுகின்றன 
உன் விழி என்மேல் படுமென 
காத்துகிடக்கும் வேளைகளில் 
எனது கூண்டின் அகலம் 
சிறுத்து கொண்டே வருகின்றன 
என் உலகம் வேறென தெரிந்தும் 
தெரியாமல் 
உன் உலகம் என்னுடையது 
என நீ புகுத்துகிறாய் என்னுள்ளே 

நான் செல்லவேண்டிய இடம் 
எனக்கு தெரியும் 
நான் சொல்வது 
உனக்கு 
புரிகிறதா 

உன்னுடைய சந்தோசங்களில் 
நான் பங்கெடுப்பதாய் 
நீயே கூறி கொள்கிறாய் 
நானும் நீ பேசுவதை பேசுவதாய் 
உணர்கிறாய் 
என் உலகம் வேறு என்பதை 
நான் காண 
நீ இட்ட கூண்டின் வெளியே 
இருக்கும் ஒரு பறவையின் ஒலி 
உணர்த்தும் கணங்களில் என் மனம் படும்பாடு 
நீ என்று உணர்வாய் என 
ஏங்கும் தருணங்களில் 
என் நாட்கள் கடந்து விடுமென 
அஞ்சுகிறேன் 
இன்னொரு தலைமுறையும் 
உனக்கு அடிமையாகி விடுமோ என்று



Saturday, April 19, 2025

 ரங்கனன் திட்டு :


மூன்று மாதம் இடைவெளி .எந்த ஒரு பறவைகள் சரணாலயமும் என்னால் செல்ல முடிவில்லை .செல்வா சார் என்னை சாட்டலுக்கும் சுல்தான்பூருக்கும் அவர் செல்லும் போதெல்லாம் அழைத்திருந்தார் .என்னால் போக முடியவில்லை .
தீடிரென்ன போன வாரம் செல்வா சார் இடம் கேட்டேன் ரங்கனந்திட்டு போயிட்டுவரலாம்ன்னு .சார் உடனே வாங்கபோகலாம்ன்னுட்டார்.

நட்ராஜ் படகோட்டிக்கு அழைப்பு செய்து நாங்கள் வருவதை உறுதி செய்தோம் .

அதிகாலை 3.45 மணியளவில் புறப்பட்டோம் .

2 மணிநேரம் 30 மணி நிமிடம் பயணம்.இடையில் ஒரு டீ கடையில் நிறுத்தி டீ அருந்திவிட்டு தொடர்ந்தோம் .

ஸ்ரீ ரங்கப்பட்டினத்தை கடந்து மூன்றில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பறவை சரணாலயம் வந்தடைந்தோம் .

போன முறை கூட்டம் இல்லை .இந்த முறை அதிகாலையே சிறிய கூட்டம் தொடங்கிவிட்டது .

சிறப்பு படகு முன் பதிவு செய்து இருந்தோம் .

அதிகாலை ரங்கனந்திட்டு எத்தனை அழகா இருக்கும் என அங்கு சென்று பார்க்க வேண்டும் 

Thursday, January 2, 2025

 வெள்ளோடு:


இது நீங்கள் பலமுறை நமது birding பயணங்களில் கூறி இருக்கிறீர்கள்

Sunday, October 20, 2024

வெள்ளோட்டில் ஒரு வெள்ளோட்டம்





2014, அக்டோபர் 2, அண்ணல் காந்தி பிறந்த தினம். அன்று நானும் கார்த்தியும்  வெள்ளோடு பறவை சராணலயத்தைல் இருக்கிறோம். பெங்களூரிலிருந்து முதல்  நாள் மதியம், திட்டமிட்ட படியே புறப்பட்டோம். 6 மணி நேரப்பயணம். இது எங்கள் திட்டம். 8 மணிக்கு ஈரோடை அடைந்து விடலாம் என்று எண்ணியது நடக்கவில்லை. வழியில், நிறையத்தடைகள். வாகன நெரிசல் ஒரு புறம், உணவு இடைவேளை சற்று தாமதம், கார் டயர் பஞ்சர் ஒரு  பெரிய இடஞ்சல், பற்றாததற்கு ஈரோடை அணுகும் போது, இரவு 9 மணி, வழித்தடுமாற்றம் வேறு. இப்படி, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை மெரிலினை அடையும் போது,  நடு ராத்திரி ஆகி விட்டது. காலை 4 மணிக்கு அறையை விட்டு கிளம்பியாக வேண்டும். எப்போழுதும், நண்பர் பரம சிவத்துடன் தான் தங்குவேன். இந்த முறை அவர், வெளியூர், சென்று விட்டு எங்களுக்காக, அவசர அவசரமாகத்திரும்பியதால், மெரிலினில் தங்கினோம். ஈரோட்டில் எனக்குத்தெரிந்து வசதியான இடம் கிடையாது. இது எவ்வளவு 'வசதி'யானது என்பதை அங்கே போய் தான் தெரிந்து கொண்டோம். சரி, 4 மணி நேரம் தானே என்று சற்றே கண் அசந்தோம். ஆக இந்த த்தூக்கம், மதிய உணவுக்கு அப்புறம் சும்மா கண் அசருவோமே, அது மாதிரி தான். நான்கு மணிக்கு டாண் என்று கிளம்பி விட்டோம். ஏன்னா, பறவை மட்டும் தானே நமக்கு ஓரே குறி!

நண்பர் பரமசிவமும் தயார் ஆகி விட்டார். சாய் குடிக்க சொல்வார், அவரை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை. வழியில், ஒரு டீக்கடை. எம்ஜியார் பாட்டு, உன்னை அறிந்தால்..... என சத்தமா ஒலிச்சுது. கேக்கனுமா. அந்த மர பெஞ்சில், உக்காந்து ஆனந்தமா டீயை பிஸ்கட்டுடன் சேத்து சாப்பிட்டது அருமை. நண்பர், பரமசிவத்திடமிருந்து ஃபோன் வந்து விட்டது. அவர் என்னடான்னா, ஏகப்பட்ட திண்டி ஐட்டங்களுடன், ஃப்ளாஸ்கில் காஃபியுடன் ரெடியாக இருந்தார்.  அந்த காஃபியின் அருமை அப்போது தெரியவில்லை. ஆனால், 2 மணி நேரம், நடந்தபின் அதுவே தேவாமிருதமானது மறக்க முடியாத அனுபவம்!

கார்த்தி, நானும் பரமசிவம் சாரும் (அவரை ஜி பி என்று நானும், அவர் என்னை வியெஸ் என்று அழைப்பதும், 30 ஆண்டுக்கு முன்பு, நான் ஈரோட்டில் இருந்த போது வழக்கம்).  நண்பர் ஜி பி யும், நானும் தான், வெள்ளோடு பறவை சரணாலயம் தொடங்க 30 ஆண்டுகளுக்கு முன், முதல் முதலாக முயற்சி எடுத்துக்கொண்டோம் என நான் பலமுறை கூறியிருக்கிறேன், போர் அடிதிருக்கிறேன் என்றே சொல்லலாம். 
இன்னிக்கு பல பேர், நான், நான் என சொல்லலாம். சொல்லப்போனா இதில், பறவைகள் மீதி ஜிபிக்கு ஆர்வம் ஏற்படுத்தி, முதல் முதலாக என் கைப்பட வன அதிகாரிக்கு  வெள்ளோடு சரணாலயம் உருவாக்க வேண்டி கடிதம் எழுதியதைத்தவிர என்னுடைய பங்கு, வேறு ஒன்றும் இல்லை. நான் பணி புரிந்த வங்கியில் இடம் மாற்றம் கிடைத்து டெல்லி சென்று விட்டேன். ஆனால் நான், சுற்றுச்சூழலாளன் ஆனதற்கு, வெள்ளோடு வெள்ளோட்டம் தான் காரணம் எனபது மறுக்க முடியாத உண்மை

எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, வெள்ளோடு போகிறோம். பள்ளி மாணவன், முதல் முதலா பள்ளிச்சுற்றுலா போவது போல ஒரு 'எக்சைட்மென்ட்'. இது தப்போ சரியோ தெரியல, ஆனா 70 வயசிலும், இது எனக்கு மகிழ்ச்சி தான்! போகும் வழியெல்லாம்,  நானும் ஜி பியும் இங்க தான், முதல்ல புஷ்சாட் பாத்தோம், Pied kingfisher பாத்தோம், அப்படி இப்படி போர் அடித்தோம். நீ என்ன நெனச்சாயோ தெரியாது. White breasted Kingfisher என ஜி பி சொல்ல, இல்ல ஜி பி அது இப்போ White throated Kingfisher என நான் சொல்ல, அதுக்கு அவர், 'அதெல்லாம் முடியாது, எனக்கு அது White breasted தான், 'இவனுங்க இஷ்டத்துக்கு பேர் மாத்துவானுங்க, நமக்கு அது White breasted தான்' அப்படிங்க, பழைய நினைவுகளில் மயங்க, 'இதோ, வெள்ளோடு வந்து விட்டது. வெள்ளோடு, ஜி பி வீட்டிலிருந்து 8 கி மீ தான் இருக்கும். 

அடேங்கப்பா, இது வெள்ளோடு தானா. என்ன ஒரு வாசல். வனத்துறை எங்களை அன்போடு வரவேற்றது. டிக்கெட் வாங்க கவுன்டரை அணுக, ஜிபிக்கு வன ஊழியர் என்ன ஒரு வரவேற்பு. மெல்ல நமது கேமராக்களை ரெடியாக்கிக்கொண்டு உள்ளே நகர்ந்தோம். 

கார்த்தி, உனது கடிதம் கண்ட பின், என் எண்ண அலைகளை மீண்டும் தொடர்கிறென்

செல்வா

பின்குறிப்பு

எனது யூடியூப் வீடியோவை இத்துடன் இனைத்துள்ளேன்

வெள்ளோடு பறவை சரணாலயம் உருவான கதை

Sunday, September 15, 2024

புலி வேட்டை





வில் கொண்டு நம் கண்கள் எனும் வில் கொண்டு நடத்திய புலி வேட்டை கபினி பயணம்.


உங்களது ஆர்வம் எத்தனை வேகமாக கபினி பயணம் என்ற உடன் செயல்பட்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.


கபினி பயணம் நாம் செய்தது மிகவும் முக்கியமான பயணங்களில் ஒன்று.

நம் மனதில் இருந்த இரண்டு எதிர்பார்ப்புகள்.ஒன்று பண்டிப்பூரில் விட்ட புலியை இங்கு காணவேண்டும்.அத்துடன் ப்ளாக் பேன்த்தர் காணல்.

நீங்கள் குறிப்பிட்டதை போல முதல் நாள் படகுப் பயணம் நாம் மட்டுமே போட்டோகிராபர்கள்.

எல்லோரும் நம்முடன் சேர்ந்து பறவைகள் பற்றி தெரிந்து கொண்டார்கள்.

இரண்டாம் நாள் பயணம் நாம் காட்டில் நுழைவு பாதையில் காத்திருக்கும் தருணம் புள்ளி மான்  ,குரங்குகளின் சப்தம் புலி அல்லது சிறுத்தையின் வருகை அறிகுறியை உணர்த்தியது.வேகமாக ரோட்டினை கடந்து சென்ற சிறுத்தையை பலரும் கவனிக்க முடியவில்லை.

அரைமணி நேரம் தொடர்ந்து காட்டில் தேடியதில் ஒரு அமைதியான பாதையில் நம்மை அமர்ந்து வரவேற்று நம்மில் பலருக்கு தெரியாத புலியின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நடவடிக்கைகளும் தெரியப்படுத்திய பெல்லா பெண் புலிக்கு நன்றி.இத்தனை அருகில் கம்பீரமான ஒரு புலியின் நடவடிக்கைகளை படம் பிடிக்கும் வாய்ப்பு.அரைமணி நேரம் நம் வாழ்வில் புலியுடன் இருந்தது வாழ்கையின் ஒரு முக்கிய பகுதியாக கருதுகிறேன்.

எத்தனை படங்கள்.அந்த இடத்திற்கு அரைமணி நேரம் கழித்து வந்த அத்தனை பேரும் எந்த இடத்தில் இருந்து புலி வந்ததது எங்கு சென்றது என கேட்கையில் நமக்கு எப்படி சொல்வது என தெரியவில்லை என்றே சொல்லவேண்டும்.ஏனெனில் அந்த திகைப்பில் இருந்து நாம் விடுபட ஒரு வாரம் ஆயிற்று.


கபினியில் பெண்புலியுடன் ஒரு புது அனுபவம்!

கார்த்தி, 

உன்னுடன்  முதல் முறையாக பண்டிப்பூரில்  சிறுத்தையுடன் சென்ற மாதம் கிடைத்த அனுபவத்தின் விளைவு தான் இந்த கபினி பயணம். இது  மிகவும் அற்புதம். சொல்லப்போனால், இது என் வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல் கல் என்றே கூறுவேன். ஆஹா, இந்த பெண்புலி பல்லா நமக்குத்தெரியாத சில காட்சிகளைக் காட்டி விட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரம், நம் கேமராக்க்கள் , போதும் போதும் என்னும் வரை படம் பிடித்துத்தள்ளி விட்டன. 

இந்த முறை நாம் இருவரும் தனியாகவே போவது என்று முடிவு செய்தது தான் தாமதம், நான்,  தலை கால் தெரியாத ஆர்வத்துடன், ஜங்கிள் லாட்ஜ் அண்ட் ரிசார்ட், கர்னாடகா அரசு ஆன்லைன் சைட்டில் ரூம் பதிவு செய்து விட்டேன். தவறை நீ சுட்டிக்காட்டிய போது தான், நான் புக் செய்தது டார்மிட்டரி என்று தெரிந்தது. ஆடிப்போய் விட்டேன், என் அவசரக்குடுக்கைத்தனத்தை நினைத்து. என்ன, மீண்டும், கால் சென்டரை அணுகி,  தனி அறைக்கு மாற்ற வேண்டிய சிரமத்தை ஒரு அனுபவமாகவே நினைக்கிறேன். அப்படி மாற்றியதால் தான், அந்த நல்ல அறை நமக்குக் கிடைத்தது. 

பாக்கேஜில் ஒரு படகு சவாரி, ஒரு ஜீப் சஃபாரி அடக்கம். என்னடா ஒரு சஃபாரியில் நமக்கு புலி காணும் அதிர்ஷ்டம் இருக்குமா என சந்தேகம். நம்ம ரெண்டு பேரில் யாருக்கோ அதிர்ஷ்ட மச்சம் இருக்குதுன்னு  நெனைக்கிறேன். கண்டிப்பா, எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கம்மி தான்! 

படகுப்பயணம் எப்படி இருக்குமோ என்ற அச்சம், பொய்த்து விட்டது. நமக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கணும். இல்லைன்னா, 40 வருஷ அனுபவம் மிக்க அந்த படகு ஓட்டிக்கு பறவைகளைப்பற்றிய என்ன ஒரு ஆழமான அனுபவம்! நாம் பயணித்த காலம் பறவைகள் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும், சில RARE பறவைகளைக்காண முடிந்தது நம் பாக்கியமே. அதிலும், அந்த OSPREY பறவை, அடேங்கப்பா, என்ன அற்புதம்!. வலசை வரும் பறவை தான். ஆனால் இது மட்டும் அங்கேயே தங்கி விட்டதாம். இந்த படகு சவாரி, நாம் தங்கியிருந்த இடத்திலேயே ஆரம்பித்தது நமக்கு வசதி. ஏன்னா, கபினி ஆற்றங்கரையிலேயே நாம் தங்கினோம். இந்த படகு சவாரியில், பொதுவாக சுற்றுலாப்பயணிகள் தான் இருந்தார்கள்.  ஆனா, நம்ம அதிர்ஷ்டம், அந்த படகோட்டி, நம்மை முன்னால் நிற்க அனுமதித்தது. ஆற்றில், நீர் வரத்து குறையாததினால், யானைகள் தண்ணீர் குடிக்க வரவில்லை. அது ஒரு ஏமாற்றம் தான். மார்ச் மாசம், மீண்டும் போகனும். 

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், சவாரி. இருட்டி விட்டது. அரசு விடுதியில் வனத்துறை, இரவு உணவு நன்றாகவே இருந்தது. அதுக்கப்புறம், ஒலியும் ஒளியும் காட்சிக்கு நாம் ரெண்டு பேர் தான் போனோம்.  நம்மைத்தவிர, இரண்டு வெளி நாட்டுக்காரங்க மட்டும் தான் இருந்தாங்க. படம் நன்றாகவே இருந்தது. சரி, நம்ம ரெண்டாம் நாள் புலியுடன் நம் அனுபவத்தை நீ எழுது. நானே போர் அடிக்கிறேன். 

இதோ, என்னுடைய யூடுயூப் வீடியோவையும் இனைத்திடுக்கிறேன். யார் பாக்கிறாங்களோ இல்லையோ, நீ கண்டிப்பா பார்த்து விடுவாய். 

என்றும் இயற்கையுடன் 

செல்வா


Interesting Kabini tiger behaviour video can be seen by clicking the link below

https://youtu.be/uTBAGh6EGK8?si=QtrbYNIHwgeVEFxv



கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......