Monday, April 29, 2024

வேடந்தாங்கலில் -ஒரு வேடனாய்

 வேடந்தாங்கல்:




என்னுள் அசைபோடும் சில இடங்களில் இதுவும் ஒன்று.ஒரு பறவையாளராய் நான் பார்த்தாக வேண்டிய ஒரு இடம். நான் சென்னையில் வேலை பார்க்கும் பொழுது இந்த இடம் வெகு அருகாமையில் இருந்ததை உணராமலே இருந்தது இன்னும் வருத்தத்தை அளிக்கிறது. நான் பறவைகள் பற்றி என் அண்ணனிடம் கலந்துரையாடியபொழுதுஅவர் முதலில்‌‌ என்னிடம் கேட்டது நீ வேடந்தாங்கல் போயிருக்கிறாயா என்று.


உடனே செல்வா அவர்களிடம் தான் முதலில் வேடந்தாங்கல் பற்றி கேட்க ஆரம்பித்தேன். செல்வா அந்த இடம் பற்றியும் அதன் பறவைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறியவுடன் ஆர்வம் அதிகரித்தது. அதே நேரத்தில் என்‌ சென்னை நண்பனின் வருகை .அவனை புட்டனகல்லிக்கு அழைத்து சென்று காண்பித்தேன். அவன்‌ இதில் ஆர்வம் இல்லை என்றாலும் என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டான். மச்சி சென்னைக்கு வா நான் உன்னை வேடந்தாங்கல் கூட்டிட்டு போறேன்னான். எனது ப்ளான் உறுதியானது.

அவனது மனைவி அனைத்து தகவல்களையும் வேடந்தாங்கல் உதவி அலுவலகத்திற்கே அழைத்து எனக்கு பகிர்ந்தார். இந்த நேரத்தில் பறவைகள் குறைந்திருக்கும் பரவாயில்லையா என்று கேட்டார். எனக்கு முதலில் வேடந்தாங்கலை பார்க்கனும்.அவ்வளவுதான். வேடந்தாங்கல் என்ன ஒரு அருமையான பெயர்.

 இந்த இடம் சென்னையில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு வழியாகவும் அல்லது மதுராந்தகம் வழியாகவும் செல்லலாம். இந்த பகுதியை சுற்றி 12 கிலோ மீட்டர் தூரம் காடுகளாய உள்ளது. ‌நான்‌ என்‌ இளைய சகோதரர் வீடு இருக்கும் இடமான பெரும்பாக்கத்தில் இருந்து விடியற்காலை நான்கு மணியளவில் கிளம்பி 4.40 மணிக்கு வண்டலுரில் எனது நண்பனை அழைத்து சென்றேன். அன்றைக்கு முதல் நாள் நண்பனின் மனைவி கூறியது நினைப்பு வந்தது.ப்ரோ நீங்க தானே ட்ரைவ் பண்ணுவிங்க.என்னா காலையில் 4 மணிங்கிறது அவருக்கு நடு‌இரவு‌.  அவனும் எனக்காக தூக்கத்தை தியாகம் செய்து கிளம்பி இருந்தான்.  அங்கிருந்து 50 நிமிடங்கள் பயணம்.விடிவதற்கு சற்று முன் அங்கு சென்றோம்.

வேடந்தாங்கல்: 18 ம் நூற்றாண்டில் இங்கு வேட்டையாடுதல் பழக்கம்.அதனாலே இதற்கு வேடந்தாங்கல் என்று பெயர்.  நுழைவு கட்டணம் 10 ரூபாய் ஒருவருக்கு.கேமராவிற்கு ரூ 50  நல்லவேளை ஒரு தேநீர் கடை இருந்தது.நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டு தேநீர் அருந்தினோம் .எவ்வளவு தூரம் உள்ளே போகனும் என்று விசாரித்தோம் ஒரு கிலோமீட்டர் வலதுபுறம் செல்லவேண்டும் என்றார்கள்.நாங்கள் தேநீர் அருந்தும் நேரத்தில் மேலே நூற்றிற்கும் மேலான பறவைகள் க்ளாஸி ஐபிஸ் , வைட் ஐபிஸ்,பெயிண்டட் ஸ்டார்க்

 பறவைகள் பார்வையிடும் இடமும், உயரமான டவரும் உள்ளது .  பராமரிப்பு ஓரளவிற்கு நன்றாகவே உள்ளது.பறவைகளின் வரைபடங்களும் தெளிவாக உள்ளன. அதற்கு நேரேதிரிலே அந்த பறவைகள் இருப்பது ஒரு அதிசயம்.  கிளிகள், ஆந்தைகள்,மாங்குயில்,செம்பொந்து (  கிரேட்டர் கோக்கல்),ப்ளு பேஸ்டு மல்கோகா .. மொத்தம் அறுபத்து ஏழு வகையான பறவைகளை பதிவு செய்ய முடிந்தது.  காலை உணவு மதிய உணவுக்க அங்கிருந்து 12 கிலோமீட்டர் வரவேண்டும்.சிறு சிறு வீட்டு உணவு விடுதிகள் 1 கிமீ அருகாமையில் உள்ளன.  ஆறு‌‌ மணிநேரம் அங்கு இருந்தது நல்ல ஒரு அனுபவம்.செல்வா அவர்களும் வந்திருந்தால் இன்னும் பல பறவைகளை பதிவு செய்து இருக்கலாம்.

எனது நண்பனும் பறவையாளனாய் மாறி இருந்தது அவன் மீண்டும் மீண்டும் சில பறவைகள் பற்றி கேட்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்.  12 மணியளவில் திரும்ப ஆயத்தமானோம்.எங்களை தவிர அங்கு யாரும் பறவைகள் பார்வையிடவோ , ஃபோட்டோ எடுக்கவோ வரவில்லை. அக்டோபர் முதல் மார்ச் வரை அதிகமான‌வலசை பறவைகள் வரும் காலம்.தோராயமாக இருபதுக்கும் மேற்பட்ட அரிய பறவைகள் வருவதாக அங்கு உள்ளவர்கள் தெரிவித்தார்கள். திரும்பி திரும்பி இரண்டு மூன்று முறை பார்த்து விட்டு கிளம்பினேன்... யாரோ நம்மை இன்னும் உற்று‌நோக்கி வழி அனுப்புவதாக தோன்றியது.

மீண்டும் வருவேன் வலசை பறவைகளை காண... அந்த ஊர் மக்களின் மனதில் என்ன தோன்றும் ஒவ்வொரு முறையும் இந்த வலசை பறவைகள் வரும்பொழுதும் திரும்பி செல்லும் பொழுதும். ஒரு பாட்டி என்னிடம் பைனாகுளர் வாடகைக்கு எடுத்துக்க சொல்லிக்கேட்டது.நான் வேண்டாம் என்றதும்.. இன்னைக்கு வேற யாரும் வரப்போவதில்லை தம்பி.எங்களுக்கு இது மூலம் தான் வருமானம் என்றார். வலசை பறவைகள் வரும் காலங்களில் மட்டுமே இவர்களது வருமானம். வலசை பறவைகள் வரும் காலம் வசந்தகாலம் என நினைக்கிறேன். இவர்களுக்கு. நாமும் சந்திப்போம் ஒரு வசந்தகாலத்தில்

எனது checklist in eBird India 26.4.24

கார்த்திகேயன்


எண்ணப்பறவை சிறகடித்து..!

தம்பி கார்த்தி,

வேடந்தாங்கல் பற்றி உனது சுவாரசியமான பதிவைப்பார்த்தேன்.  ஏறத்தாழ ஒரு நாள் முழுதும் அங்கே இருந்திருக்கிறாய்.  மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான இடம். தமிழகத்தின் மிகப்பழமையான பறவை சரணாலயம். 1936இல் நிறுவப்பட்டது என வரலாறு கூறுகிறது. ஏறத்தாழ 30000 பறவைகள் இங்கே பதிவாகியிருக்கிறது. ஆனால் என்ன காரணத்தாலோ இங்கு அதிகபட்ச பறவை வகை எண்ணிக்கை இது வரை 209 ஆக மட்டுமே பதிவாகியிருக்கிறது. நீ எழுதியுள்ளது போல், அங்கே இந்த சராணலயத்தேயே நம்பியிருக்கும், ஏழை மக்களுக்கு, அதிக சுற்றுலா பயணிகள் வருவது அவசியம். அந்த வயதான பெண்மணி தனது BINACULAR ஐ யாராவது வாடகைக்கு எடுக்க மாட்டார்களான்னு ஏங்குவதை படிக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பறவை ஆர்வலர்கள் ஏன் குறைவு எனத்தெரியவில்லை

2016இல் ஒரு முறை இங்கு ஜூலை மாதத்தில் போனேன். அப்ப இந்த சரணாலயம் மூடப்பட்டிருந்தது. எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேன். ஒண்ணும் நடக்கவில்லை. ஆனால், ஒரு உள்ளூர்க்காரர், சரணாலயத்தை ஒட்டி உள்ள நடைபாதையில் கொஞ்ச தூரம் போனா, சரணாலயத்தில் கொஞ்சம் பாக்கலாம்னார். என்னோடு வந்திருந்த குடும்பத்தை விட்டுவிட்டு நான் மட்டும் நடக்கத்தொடங்கினேன். என் முயற்சி வீண் போகவில்லை. பெலிகன்னும் ஓபன்பில்லும் பெய்ண்ட்டட் ஸ்டார்க்கும் மனசுக்கு தெம்பைக்கொடுத்தன. 25 வகைப்பறவைகள் ம்ட்டுமே பதிவு செய்ய முடிந்தது. மீண்டும் காணும் வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை. நல்ல சதுப்பு நிலம். நன்றாக பராமரிக்கிறார்கள்.

Asian Openbill recorded by V Selvarajan in eBird on 23.7.2016

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு செய்தி படித்தேன். சன் ஃபார்மா நிறுவனம், இந்த 30 ஹெக்டேர் பரப்புள்ள சராணலத்துக்குள் ஊடுருவ முயற்சி செய்தார்கள். ஆனால், அரசு அனுமதி அளிக்கவில்லை. நல்லகாலம். கிட்டத்தட்ட 3 கிமி தொலைவில் உள்ள இந்த ஆலை இன்னும் விரிவுபத்த  வேண்டுமாம். என்ன பேராசை! இது போன்ற தாக்குதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றால், உள்ளூர் வாசிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். செய்வார்களா?

எனது 23.7.2016 eBird checklist  

https://ebird.org/checklist/S31050933


செல்வா














No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......