Sunday, September 15, 2024

புலி வேட்டை





வில் கொண்டு நம் கண்கள் எனும் வில் கொண்டு நடத்திய புலி வேட்டை கபினி பயணம்.


உங்களது ஆர்வம் எத்தனை வேகமாக கபினி பயணம் என்ற உடன் செயல்பட்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.


கபினி பயணம் நாம் செய்தது மிகவும் முக்கியமான பயணங்களில் ஒன்று.

நம் மனதில் இருந்த இரண்டு எதிர்பார்ப்புகள்.ஒன்று பண்டிப்பூரில் விட்ட புலியை இங்கு காணவேண்டும்.அத்துடன் ப்ளாக் பேன்த்தர் காணல்.

நீங்கள் குறிப்பிட்டதை போல முதல் நாள் படகுப் பயணம் நாம் மட்டுமே போட்டோகிராபர்கள்.

எல்லோரும் நம்முடன் சேர்ந்து பறவைகள் பற்றி தெரிந்து கொண்டார்கள்.

இரண்டாம் நாள் பயணம் நாம் காட்டில் நுழைவு பாதையில் காத்திருக்கும் தருணம் புள்ளி மான்  ,குரங்குகளின் சப்தம் புலி அல்லது சிறுத்தையின் வருகை அறிகுறியை உணர்த்தியது.வேகமாக ரோட்டினை கடந்து சென்ற சிறுத்தையை பலரும் கவனிக்க முடியவில்லை.

அரைமணி நேரம் தொடர்ந்து காட்டில் தேடியதில் ஒரு அமைதியான பாதையில் நம்மை அமர்ந்து வரவேற்று நம்மில் பலருக்கு தெரியாத புலியின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அத்தனை நடவடிக்கைகளும் தெரியப்படுத்திய பெல்லா பெண் புலிக்கு நன்றி.இத்தனை அருகில் கம்பீரமான ஒரு புலியின் நடவடிக்கைகளை படம் பிடிக்கும் வாய்ப்பு.அரைமணி நேரம் நம் வாழ்வில் புலியுடன் இருந்தது வாழ்கையின் ஒரு முக்கிய பகுதியாக கருதுகிறேன்.

எத்தனை படங்கள்.அந்த இடத்திற்கு அரைமணி நேரம் கழித்து வந்த அத்தனை பேரும் எந்த இடத்தில் இருந்து புலி வந்ததது எங்கு சென்றது என கேட்கையில் நமக்கு எப்படி சொல்வது என தெரியவில்லை என்றே சொல்லவேண்டும்.ஏனெனில் அந்த திகைப்பில் இருந்து நாம் விடுபட ஒரு வாரம் ஆயிற்று.


கபினியில் பெண்புலியுடன் ஒரு புது அனுபவம்!

கார்த்தி, 

உன்னுடன்  முதல் முறையாக பண்டிப்பூரில்  சிறுத்தையுடன் சென்ற மாதம் கிடைத்த அனுபவத்தின் விளைவு தான் இந்த கபினி பயணம். இது  மிகவும் அற்புதம். சொல்லப்போனால், இது என் வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல் கல் என்றே கூறுவேன். ஆஹா, இந்த பெண்புலி பல்லா நமக்குத்தெரியாத சில காட்சிகளைக் காட்டி விட்டது. கிட்டத்தட்ட அரைமணி நேரம், நம் கேமராக்க்கள் , போதும் போதும் என்னும் வரை படம் பிடித்துத்தள்ளி விட்டன. 

இந்த முறை நாம் இருவரும் தனியாகவே போவது என்று முடிவு செய்தது தான் தாமதம், நான்,  தலை கால் தெரியாத ஆர்வத்துடன், ஜங்கிள் லாட்ஜ் அண்ட் ரிசார்ட், கர்னாடகா அரசு ஆன்லைன் சைட்டில் ரூம் பதிவு செய்து விட்டேன். தவறை நீ சுட்டிக்காட்டிய போது தான், நான் புக் செய்தது டார்மிட்டரி என்று தெரிந்தது. ஆடிப்போய் விட்டேன், என் அவசரக்குடுக்கைத்தனத்தை நினைத்து. என்ன, மீண்டும், கால் சென்டரை அணுகி,  தனி அறைக்கு மாற்ற வேண்டிய சிரமத்தை ஒரு அனுபவமாகவே நினைக்கிறேன். அப்படி மாற்றியதால் தான், அந்த நல்ல அறை நமக்குக் கிடைத்தது. 

பாக்கேஜில் ஒரு படகு சவாரி, ஒரு ஜீப் சஃபாரி அடக்கம். என்னடா ஒரு சஃபாரியில் நமக்கு புலி காணும் அதிர்ஷ்டம் இருக்குமா என சந்தேகம். நம்ம ரெண்டு பேரில் யாருக்கோ அதிர்ஷ்ட மச்சம் இருக்குதுன்னு  நெனைக்கிறேன். கண்டிப்பா, எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கம்மி தான்! 

படகுப்பயணம் எப்படி இருக்குமோ என்ற அச்சம், பொய்த்து விட்டது. நமக்கு நிறைய அதிர்ஷ்டம் இருக்கணும். இல்லைன்னா, 40 வருஷ அனுபவம் மிக்க அந்த படகு ஓட்டிக்கு பறவைகளைப்பற்றிய என்ன ஒரு ஆழமான அனுபவம்! நாம் பயணித்த காலம் பறவைகள் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும், சில RARE பறவைகளைக்காண முடிந்தது நம் பாக்கியமே. அதிலும், அந்த OSPREY பறவை, அடேங்கப்பா, என்ன அற்புதம்!. வலசை வரும் பறவை தான். ஆனால் இது மட்டும் அங்கேயே தங்கி விட்டதாம். இந்த படகு சவாரி, நாம் தங்கியிருந்த இடத்திலேயே ஆரம்பித்தது நமக்கு வசதி. ஏன்னா, கபினி ஆற்றங்கரையிலேயே நாம் தங்கினோம். இந்த படகு சவாரியில், பொதுவாக சுற்றுலாப்பயணிகள் தான் இருந்தார்கள்.  ஆனா, நம்ம அதிர்ஷ்டம், அந்த படகோட்டி, நம்மை முன்னால் நிற்க அனுமதித்தது. ஆற்றில், நீர் வரத்து குறையாததினால், யானைகள் தண்ணீர் குடிக்க வரவில்லை. அது ஒரு ஏமாற்றம் தான். மார்ச் மாசம், மீண்டும் போகனும். 

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், சவாரி. இருட்டி விட்டது. அரசு விடுதியில் வனத்துறை, இரவு உணவு நன்றாகவே இருந்தது. அதுக்கப்புறம், ஒலியும் ஒளியும் காட்சிக்கு நாம் ரெண்டு பேர் தான் போனோம்.  நம்மைத்தவிர, இரண்டு வெளி நாட்டுக்காரங்க மட்டும் தான் இருந்தாங்க. படம் நன்றாகவே இருந்தது. சரி, நம்ம ரெண்டாம் நாள் புலியுடன் நம் அனுபவத்தை நீ எழுது. நானே போர் அடிக்கிறேன். 

இதோ, என்னுடைய யூடுயூப் வீடியோவையும் இனைத்திடுக்கிறேன். யார் பாக்கிறாங்களோ இல்லையோ, நீ கண்டிப்பா பார்த்து விடுவாய். 

என்றும் இயற்கையுடன் 

செல்வா


Interesting Kabini tiger behaviour video can be seen by clicking the link below

https://youtu.be/uTBAGh6EGK8?si=QtrbYNIHwgeVEFxv



Thursday, September 12, 2024

முதல் அனுபவம் காட்டுக்குள்ளே திருவிழா


பந்திப்பூரின் அனுபவங்கள் என்று நான் உங்களின் பகுதிக்கு பெயரிட வேண்டும் .

Tuesday, September 10, 2024

புலிகளின் ராஜ்ஜியத்தில் பறவைகளைத்தேடி!


 கார்த்திக், 

பண்டிபுர் பயணம் Bandipur tiger reserve பற்றி எழுதியிருந்தாய். அது எனக்கும் ஒரு புதிய அனுபவம் தான். வனத்துறை ஜீப்பில் காடுகளுக்குள் பயணம் எனக்கு சமீபத்தில் கார்பெட் காடுகளில் இதே போல் பயணித்ததை நினைவு படுத்தியது. எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருந்தது. மழை காலம் இல்லையா? இது வரை எனது 40 வருட வன நடைப்பயணங்களில், இந்த அளவு விலங்குகளை ஒன்றாகக் கண்டதில்லை. சஃபாரி ஆரம்பித்த சில நொடிகளிலேயே, யானைக்கூட்டம், நல்ல காட்சி.  அது மட்டுமா, அடேயப்பா, புள்ளி மான்களின் கூட்டத்திற்கு அளவே  இல்லை. என் வாழ் நாளில், இத்தனை மான்களை ஒட்டு மொத்தமா, விலங்கியல் பூங்காக்களில் கூட கண்டதில்லை. பக்கத்தில் போய், அந்த குட்டி மானைத்தூக்க ஆசை, சின்ன சின்ன ஆசை தான்! காட்டிலே கால் வைக்க விட மாட்டேனுட்டாங்களே பாவிகள்! 90களில், நாங்க ஆளியார், Topslips காடுகளில், எத்தனை முறை நடந்திருக்கிறோம் ! வால்பாறை காடுகளில், ஒருமுறை சாம்பார் மான், ஒரு ஓடையில் வெகு அருகில் நின்று கொண்டிருந்தது. அருகில் போய் பார்த்தோம். காலில் அடி பட்டு இருந்தது. இல்லன்னா, அது இந்நேரம் ஒடியிருக்கும். ஆனா ஒரு சாம்பார் மானை இவ்வளவு அருகில் பார்ப்பதுக்கு நல்ல சந்தர்ப்பம்.  நடைப்பயணம் முடிஞ்சு வனத்துறைக்கு செய்தி கொடுத்தோம். அப்போதெல்லாம், Google Map GPS எல்லாம், என்ன என்றே தெரியாது. Trek route எல்லாமே குத்து மதிப்பு தான்.  நல்லவேளை, ஜீப் டிரைவர், பறவைகளைப்பற்றி அறிந்திருந்தார். சில அரிய பறவைகள் பெயர் கூட அவருக்குத் தெரிந்திருந்தது. பின்னால், வனஅலுவலர், ஒவ்வொரு ஓட்டுனரும், இயற்கையாளர் தான் என்று பெருமிதமாக சொன்னார். இது வரை நான் கண்டிராத Red headed Vulture ஐ பார்த்தது மிக மகிழ்ச்சி. அது மட்டுமல்ல. White rumped Vulture ஐயும் இங்கு தான் முதல் முதலாகப்பார்த்தேன். மற்றும் பல அரிய பறவைகள் பார்க்க முடிந்தது. மற்ற எல்லா வனக்காப்பகங்களையும் போல இங்கேயும், டிரைவர்கள், ஒருவரோடு ஒருவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வனவிலங்கு நடமாட்டத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். என்னடா, ஒரு புலியையும் பார்க்க முடியிலையே, சஃபாரி முடியப்போகுதே... சொல்லி முடிக்கலை, நம்ம டிரைவருக்கு அந்த நல்ல சேதி கெடச்சுது. நல்ல வேளையா நம்ம் வண்டி ரொம்ப தூரத்தில், இல்லை. அலச்சல் வீண் போகல. ஒரு சிறுத்தை மிக அருகில் .. என்ன ஒரு கம்பீரம். நம்ம கேமரா செட்டிங்க் எல்லாம் பண்ண முடியல. சில நண்பர்கள், ஆர்வக்கோளாறில், ஜீப்பில் நம்ம மறச்சிட்டாங்க. ஓரளவுக்கு நல்ல கிளிக் கெடச்சுது. ஆனா, எல்லாமே ஓரிரு நிமிஷம் தான். பாய்ந்து பறந்து புதருக்கு பின்னால மறஞ்சிருச்சு. இந்த திருப்பதியில், பாலாஜி தரிசனத்துக்காக, நாள் பூரா, காத்திருக்கிற பக்த கோடிகளுக்கு, ஒரு நிமிஷம் கூட முழுசா பார்க்க முடியாது இல்லயா? ஹும் , அது மாதிரி தான்.. ஒரு விதத்தில பாத்தா, இந்த உயிரினங்களும், நமது கடவுள் தானே! அப்புறம் என்ன, மீண்டும், காட்டெருமை, கழுகுகள் மாதிரி, லட்டுகளும், நமக்கு வரப்பிரசாதமே. 

நம்ம ரெண்டு ஜீப் சவாரியும், வேகமா முடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு. நம்ம தங்கி யிருந்த வனத்துறை விடுதியும், உணவும், மற்றும், அந்த உபசரிப்பும், அருமை. என்ன, சில மனக்குறைகள். நம்மை வழி நடத்திச்சென்ற நண்பர், ஒரு வியாபார நோக்குடனேயே செயல் பட்டார். Camera techniques சொல்லிக்கொடுப்பதாக வாங்கிய பணம் waste. ஆனால், நீ கூறியது போல், இது நமது முதல் பயணம். எனவே விட்டுத்தள்ளுவோம். என்ன, ஒரு சிறிய ஆதங்கம்,  புகைப்படப்பயிற்சி என்று  அதுக்கு கொஞ்சம் பணவிரயம் ஆயிருச்சு. 

ஒரு சந்தோஷம், Lesser whistling duck, Tickel's flycatcher, Pigmy Woodpecker, Racket tailed Dongo, Crested Serpent Eagle, Red headed Vulture, White Rumped Vulture இது எல்லாமே, மகிழ்ச்சி தான். வெறும் புலிகளை பாக்க மட்டும், நம்ம ரெண்டு பேருக்குமே மனசு கேக்கல.  நம்ம  EBird list இதோடு இணைத்துள்ளேன்.

இன்னொரு ஆதங்கம், கார்த்தி , வழக்கம் போல காரை நீங்களே ஓட்டும்படி செய்து விட்டேனே என்பது தான். 

செல்வா

பின் குறிப்பு 

கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யுங்கள். பார்த்து விட்டு , கருத்துகளை பதிவு செய்யவும் 

பண்டிபூர் வீடியோ

பண்டிப்பூர் பறவைகள்

Monday, September 9, 2024

உன் விழிகள் தேடிய இரைகள்


பயணங்கள் எங்களின் இலக்காக மாறி சில வருடங்கள் ஆகின .

சில மாதங்களுக்கு முன் செல்வா அவர்கள் இந்த வருடம் எங்கெல்லாம் செல்லலாம் என கேட்டபோது வேகமாக சில  இடங்களை தேர்ந்தெடுத்து அனுப்பினேன் .


வேடந்தாங்கல் 

ரங்கனந்திட்டு 

ஜிம்க்கார்பேட் 

பந்திப்பூர் 

நகெர்ஹோலே 

கபினி 

சத்தால் 

முதுமலை 

வயநாடு 

குர்க் 

தலக்காடு 

தாண்டெலி 

ஆகும்பே 


இதில் இன்னும் செல்வா அவர்கள் தொடர்ந்து சேர்த்துக்கொண்டு இருக்கிறார் .


இதில் பறவைகளுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் .நாங்கள் எங்கு சென்றாலும் தேடுவது பறவைகளைத்தான் முதலில் .


பந்திப்பூர் : இங்கு எல்லோரும் செல்வது புலிகளையும் சிறுத்தைகளையும் பார்ப்பதற்காக .நாங்களும் அதற்காகத்தான் சென்றோம்.ஆனால் எங்கள் கண்கள் தேடியது பறவைகளைத்தான்.அப்படி தேடிப்பார்த்ததுதான் crested serpentine eagle .

நாங்கள் புலியைத்தேடி ஜீப்பில் சென்றுகொண்டு இருந்தோம் .என் எதிரில் பார்த்தவுடன் நான் fishowl என்றே நினைத்தேன் .சார் owl என்றேன். 

செல்வா சாரின் அனுபவம் விடை கொடுத்தது ..இது crested serpentine eagle ..எங்களது ஓட்டுனரும் அதை உறுதி செய்தார் .பந்திப்பூரில் JLR ஜீப் ஓட்டுனர்கள் எல்லாருமே ஒரு பறவையாளர்கள் ,விலங்கியியலாளர்கள் .


அது ஒரு brown கலரில் பார்ப்பதற்கு சற்று black kite போல இருந்தாலும் ,கொஞ்சம் அழகாக தலையில் கொண்டையுடன் காணப்பட்டது .


பெயரிலே பொருள் இருந்தது அது பாம்பை உண்ணக்கூடிய பறவை என்று .அது பிற பறவைகளையும் ,தவளைகளையும் ,ஓணான்கள் எலிகள் அனைத்தையும் உண்ணும் .


இது எப்பொழுதும் மரத்தின் மீது காத்திருந்து தனக்கான  உணவு வரும்போது பிடித்து உண்ணக்கூடியது .


இது பொதுவாக மிக உயர்ந்த மலைப்பகுதியில் காணப்படும் .சில குறிப்புகளில் உலகத்தில் மொத்தம் 21 வகையான crested serpentine eagle இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

நூற்றுக்கும் மேற்ப்பட்ட kingfisher இருப்பதாக கேள்விப்பட்டதில் இருந்து அத்தனையும் பார்த்தாகவேண்டும் ,photo எடுத்தாகவேண்டும் என்னும் ஏக்கம் இப்பொழுது crested serpentine eagle வகை பற்றி தெரிந்ததும் எங்கு சென்று தேடுவது .


எண்ணங்களை வீசு வலையாக பறவைகளின்  விழிகளில் சிக்கும் உன் ஏக்கங்கள்

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......