Sunday, March 17, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..-3

 

தம்பி கார்த்தி,

இந்த திம்மசந்தரா ஏரி, இவ்வளவு பக்கத்தில் இருந்தாலும், நீ சொல்வதற்கு முன்னால்,  எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஏரிக்கு போன பிறகு, சில உண்மைகளை தெரிந்து கொண்டேன். எனது முதல் கருத்து தவறானது. அதாவது, இது இன்னும் மனிதனால் அதிகம் சீண்டப்படாத ஏரி என்று நினைத்தேன்.  ஆனால், பின்னர் தான் தெரிந்தது, மனுஷன், இதையும் விட்டு வைக்கவில்லை. வெளி நாட்டுப்பெண்மணி ஒருவரை வழியில் கண்டோம். தனது நாயுடன், காலை வேளையில் இந்த ஏரிக்கரையில் நடப்பது அவரது வழக்கமாம். அந்த அம்மா ஒரு திடுக்கிடும் தகவல் சொன்னார்கள். "வெடி வெடித்து இங்குள்ளவர்கள் பறவைகளை விரட்டி விடுகிறார்கள். முன்பெல்லாம் நிறைய பறவைகள் வரும். இப்ப எல்லாம் வரதே இல்லை" என்றார்கள். இருந்தாலும், நாம் ஓரளவுக்கு நிறைய பறவைகளைப்பார்த்தோம். இன்னும், ஏரி நன்றாகத்தான் இருக்கிறது. அழகான ஏரி. கிட்டத்தட்ட 60 பறவைகளை கணக்கெடுத்தோம். 

தம்பி, இப்பொழுது, பறவைகளின் பெயர் மாற்றம், உலகளவில் நடக்கிறது. இப்பொழுது சலிம் அலி அய்யா வந்தால், அவருக்கே ஒரே குழப்பமாக இருக்கலாம். நம்ம white throated kingfisher முன்பெல்லாம், white breasted kingfisher என்று சொன்னோம். எனது பழைய பறவை ஆர்வலர், ஈரோடு பரமசிவன் வேடிக்கையாக கடிந்து கொள்வார். என் பெயர், பரம சிவன் தான்,  நீங்க இஷ்டப்படி மாத்திகிட்டா, நான், ராமசாமி ஆக முடியுமா?  அதெல்லாம் முடியாது என்பார். அது அந்த பறவை மீது இருந்த ஈடுபாடு என்றுதான் கூறவேண்டும். இத்தனைக்கும் அவர் ஒரு MSc Botany, MPhil. பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரை, flora உலகத்திலிருந்து fauna உலகத்திற்கு அழைத்து வந்ததில், பெரும் பங்கு அடியேனைச்சேரும். 

சரி, இந்த ஏரிக்கு வருவோம். ஏரியின் மேற்குப்புறம் வயல் வெளிகள் ஏராளம். வடபகுதியில் அந்த இராஜகால்வாய் (கன்னடத்தில் இராஜகலுவே) எனக்கு எனது இளமைப்பருவத்தை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது. அப்போது திருச்சியில் நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். எனது நண்பன் பக்கத்து கிராமத்தில் இர்ந்து வருவான். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு நாள் அவனோடு வனது கிராமத்துக்குப்போனேன். அவனது தென்னந்தோப்பை அடுத்து அந்த அழகான கால்வாய். நான்கு அடி தண்ணீர் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்துது. அதில் படுத்துக்கொண்டிடுந்து விட்டு இளநீர் குடித்து கும்மாளம் அடித்தது நினைவுக்கு வந்து விட்டது. இந்த இராஜகால்வாயில் அதே சூழ்நிலை. தம்பி, இதே போல உள்ள ஒரு இராஜ கால்வாய்யை சீரமைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பது உனக்குத்தெரியும். ஆக, உடனே அதில் குதிக்க ஆசை. வயசாயிடுச்சே! உடல் ஒத்துழைக்க வேண்டாமா? அப்புறம், அந்த  சப்போட்டா பழ மரங்கள் ! ஆஹா, காய்த்துக் குலுங்கும் சப்போட்டா பழங்கள் அருமை. ரம்மியமான சூழல். ஏரியின் வ மற்றும் கிழக்குக்கறைகளில், பண்னை வீடுகளும், திராட்சைத்தோட்டங்களும் வந்து விட்டன், இது சற்றே கவலை அளிக்கிறது. மீண்டும், இந்த ஏரிக்கு வரவேண்டும் 

இந்த வாய்ப்புக்கு நன்றி!

செல்வா


No comments:

Post a Comment

கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......