Saturday, March 23, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..!-5


தம்பி கார்த்தி,

ரெங்கனத்திட்டு பற்வை சரணாலயம். பல முறை இங்கே போயிருக்கிறேன். ஆனா, இந்த முறை உன்னோடு போனது ஒரு புது அனுபவம். பெங்களூருவிலிருந்து 3 மணிக்கு கிளம்ப சற்று யோசனையாத்தான் இருந்தது. ஆனா கெளம்பிட்டோம்.  கொஞ்சம்கூட அசதியில்லை. எவ்வளவு varieties பாக்கப்போறோம்ங்கிற excitement தான் காரணம். இன்னும் 19 வயசுன்னு நெனப்பு அப்படின்னு மனைவி சொல்றது அடிக்கடி கேக்கும். பறவை பாக்கப்போகும் போது, 19 ஆவது, 69 ஆவது, அதுவும், கார்த்தி பக்கத்தில இருக்கும் போது. ஒரு ட்ரிப்பில்,  இன்னொரு இளைஞர், என்னோடு இருந்தார். சற்று தலை வலி, சற்றே ஓய்வு எடுக்க நினைத்தேன். ஆனா, அந்த இளைஞரோ, கொஞ்சம் கூட யோசிக்காம , சுவாரசியமா Tawny Eagle பத்தி பேசிகிட்டே இருந்தார்.  அதுக்கப்புறம்,  Tawny Eagle பாக்கற ஆசையே போயிடுச்சு. ஆனா, நான் உனது அன்பையும், உதவும் இயல்பையும் பாத்திருக்கிறேன். 

நீ காரை நிதானமாக ஓட்டியது மட்டுமல்ல, 6 மணிக்கு சரணாலயத்தை அடைந்தும் விட்டோம். பறவை காணலில், மிக முக்கியம், அதிகாலையில், இலக்கை அடைவது தான். இனி வரும் காலத்தில், முதல் நாளே, மைசூரிலோ அல்லது, ரெங்கனதிட்டுவிலோ தங்கி விடவேண்டும். மைசூரிலிருந்து 15 கிலோமீட்டர் தான். 

நீ குறிப்பிட்ட Tickell's flycatcher, முதன்முதலாகப்பார்த்தது, ஈரோட்டை அடுத்த வெள்ளோடு பறவை சரணாலயைத்தில் தான். அப்ப அது சரணாலயமா, அறிவிக்கப்படல. நானும், என் நண்பர் பரமசிவன், மற்றும் நண்பர்களோட வெள்ளோடு ஏரி பத்தி கேள்விப்பட்டு போறோம். Tickell's  தான், எங்கள் கண்ணில் முதலில் பட்டது. என்ன அழகு. ஆரஞ்சும்  நீலமும் பளிச்சுன்னு இருந்துது. ஆஹா, அருமை என்று தோன்றியது. அது தான், எனக்கு அங்கே பற்வை அட்டவணை (Bird Checklist) எடுக்கணும்னு ஆர்வத்த உண்டாக்கியது என்று நினைக்கிறேன். வெகு விரைவிலேயே, நாங்கள் DFO வை அணுகி, வெள்ளோட்டை சரணாலயனமாக்கக் கோரிக்கை வைத்தோம். நான் மாற்றலாகி பணி நிமித்தம், டெல்லி போயிட்டேன். நண்பர் பரமசிவன் தாஅன், விடா முயற்சியுடன் அந்த சரணாலயம் அமைய முக்கிய காரிய கர்த்தா. எனது பங்கு, நான் தலைமை தாங்கி பறவை கணக்கெடுப்பு செய்ததும் வனவிபாகத்துக்கு என் கைப்பட கடிதம் எழுதியது மட்டுமே. நண்பர் பரமசிவன் என் வாழ்க்கையில் நான் கண்ட ஒரு மாமனிதர். ஆக, அது ஒரு சகாப்தம்

ரெங்கணதிட்டு பரவிகளின் சொர்க்கபூமி. நீர், நிலம், வயல், பசுஞ்சோலை என நான்கு இடங்களும் ஒன்றாக இணைந்த  இயற்கை விந்தை. அதானால் தான், நாம் வயலில்  Rednaped Ibis ஐயும்  பாறைகளில் Thick knee, நீரில் Spot billed pelican, மரங்களில் Paradise flycatcher, வானத்தில் Crested Serphant Eagle என வித விதமான பறவைகளைப் பார்த்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பு. ரெங்கணதிட்டுவில், 236 வகை பறவைகள் இதுவரை பதிவாகி உள்ளன.  67 பறவைகளை பதிவிட்டதால், உனது பெயர் E Bird India பதிவுகளில், நாங்காவது இடத்தில் இருக்கிறது. எனது வாழ்த்துகள். 

படகு ஓட்டும் நாகராஜ் பற்றிக் குறிப்பிட வேண்டும். எப்படி இத்தனை பறவைகளின் ஆங்கிலப்பெயர் தெரியும் என்று கேட்டேன். 10 வருடமாகப் பார்த்த அனுபவம் தான் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பலமுறை பரத்புர் பறவை சரணாலயம் சென்றிருக்கிறேன். அற்புதமான இடம், ராஜஸ்தானில் இருக்கிறது. அங்கே 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்சா தொழிலாளிகள் இருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளை 12 கிமீ அழைத்துச் செல்வதும் பறவைகளை அடையாளம் காட்டுவதும் தான் அவர்களுக்குத்தொழில். அதுவும் வலசை வரும் பறவைகள் ஆறு மாதம் தான் இருக்கும். மற்ற நாட்களில், கூலிவேலை தான். ஆனால், 200 பறவைகளின் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், ஃப்ரஞ்ச் பாஷைகளீல், வெளுத்துக்கட்டுவார்கள். ஆண்டுக்கு ஒரு தடவை BNHS என்ற தன்னார்வ அமைப்பு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன. ஆனால் நம்ம ஊர் நாகராஜுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. இதைத்தான் அனுபவ அறிவு எங்கிறோம். 

காவரியாற்றின், ஒரு வளைவு தான் இந்த ரெங்கணதிட்டு. அங்கங்கே  மனிதன் அனுகமுடியாத திட்டுக்கள் இருக்கின்றன. திட்டுக்களில், மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க, மணல் மூட்டைகளை அடுக்கி வேலியிட்டு, பாது காக்கிறது வனத்துறை. எக்கச்சக்கமான முதலைகள் படகின் வெகு அருகில் இருந்தன. இருந்தாலும் இதுவரை ஒரு அசம்பாவிதமும் நேர்ந்ததில்லை என நாகராஜ் கூறினார். 

இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம், பறக்கும் நரிகள். அதென்ன தெரியுமா? பெரிய size  வௌவாலைத்தான் குறிப்பிடுகிறோம். 14 ஆண்டுகளுக்கு முன் போன போது பார்த்திருக்கிறேன். நாகராஜை கேட்ட போது இன்னும் இருக்கின்றன என்று கூறி, அதோ அங்கே பாருங்கள் என்று காட்டினார். இருந்தாலும், முன்பு இருந்த அளவு எண்ணிக்கை இல்லை. இழந்து வருகிறோமோ என்று ஒரு ஐயம். உண்மை தான், கொஞ்சம் கொஞ்சமாக நமது விலங்கினங்களை இழந்து வருகிறோம் என்பது கவலையை அளிக்கிறது. 

ஏறத்தாழ 6 மணி நேரம், நேரம் போனதே தெரியவில்லை. சற்றே கால்வலி தான். கிட்டத்தட்ட 8 கிமீ நட்ந்து இருக்கிறோம். paradise flycathcher rufous morph பார்த்தது ஒரு வரப்பிரசாதம். திரும்பி வரும் போது மட்ட மத்தியானம். வெய்யில் அதிகம். அதிவிரைவு சாலை. கார் ஓட்டுவது நன்றாக இருந்தது. சற்றே கண் அசந்து விட்டேன். ஆனால், நன்றாக கார் ஓட்டினாய். வழியில், தென்னை மரங்கள் வாடி காய்ந்து காணப்பட்டன. வழியில், ஒரு சின்னக்கடை கூட இல்லை. தாகமாக இருந்தது. சமாளித்துக்கொண்டோம். சரணாலயத்தில் இருந்த உணவகத்தில் உணவும் சடியில்லை, காலை உணவு கிடைக்கும்  நேரமும் சாதகமாக இல்லை. 

மீண்டும், Oct Nov மாதங்களில் போகவேண்டும். 

செல்வா


நிற்பதுவே, நடப்பெனவே, பறப்பனவே!

ங்கனந்திட்டு: யாதுமாகி நின்றாய்- நிற்பதுவே, நடப்பெனவே, பறப்பன வே!


இந்த ரங்கனந்திட்டு பெயரை ஒரு ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் .ஒரு ஐந்து வருடம் முன்னாடி இங்க போயிருந்தா என்னோட பார்வை எப்படி இருந்துருக்கும்னு என்னால சொல்ல முடியாது .ஆனால் ஒரு எட்டு வருடம் முன்னாடி முட்டுக்காடு போனப்ப ஒரு போட்டிங் போனோம் .அப்பதான் கிங்பிஷர் ஹோவேரிங் பண்ணி தண்ணிக்குள்ள டைவ் அடிச்சு மீனபுடிக்கிறதை பார்த்தேன் .அப்பதான் முதல் முறையா என்னிடம் கேமரா இல்லேயே என்ற ஏக்கம் வந்தது.நானும் செல்வா சாரும் ஒரு மூன்று தடவை  ரங்கனந்திட்டு போகிற பிளான் போட்டு முடியல .இந்த முறை கண்டிப்பா போணும்ன்னு முடிவு பண்ணிட்டோம் .ஆனா வலசை காலம் முடியும் தருணம் இப்போ .எத்தனை பறவைகள் இருக்கும்னு தெரியாது .
ஒரு இடத்துக்கு போறதுக்கு முன்னாடி அதப்பத்தி தெரிந்து கொண்டு நம்மள தயார் செய்துகொண்டு போகவேண்டும் .செல்வா  அவர்களும் அவரது அனுபவங்களின் மூலம் எனக்கு கூறியது எத்தனை மணிக்கு நாம் அங்கு செல்ல முடியும். கூட்டம் இருந்தால் நம்மால் பறவைகளை சரியாக காண முடியாது .உடனே இருவரும் எங்களது தொடர்பில் உள்ளவர்களின் மூலம்  ரங்கனந்திட்டடில் உள்ளவர்களின் தொடர்பு கிடைத்தது .நாங்கள் அவர்களின் மூலம் அதிகாலை சிறப்பு படகு வசதியுடன் கூடிய guidum ஏற்பாடு செய்யப்பட்டது .படகு செலுத்துபவர் நாகராஜை தொடர்கொண்டதுக்கு எங்களை ஆறு மணி முப்பது நிமிடங்களுக்கு அங்கே இருக்குமாறு கூறினார் .
நாங்கள் பெங்களுருவில் இருந்து மூணு மணிக்கு கிளம்ப வேண்டும் .என்ன ஒரு மகிழ்ச்சி எங்கள் இருவருக்கும்.இருவரும் இதைப்பற்றி ஒருவாரம் பேசினோம் என்றால் எங்களது ஆர்வம் எப்படி இருக்கும் .எங்கள் இருவருக்கும் ebirdil பதிவு செய்யும் பழக்கம் உள்ளது .அதன் வாயிலாக எத்தனை பறவைகள் அங்கே கணக்கிடப்பட்டுள்ளது என பார்த்தோமே.இருநூற்றுக்கும் மேல .ஆர்வத்துடன் நாங்கள் கண்டிராத பறவைகள் ஏதாவது உண்டா என ..திருத்தம் நான் கண்டிராத ..tickel's flycatcher , blue robin என்ன ஒரு அழகு .கண்டிப்பா அதன் பதிவு என் வாழ்க்கையில் ஒரு மயில்கல் . காலையில் மூன்று மணிக்கு கிளம்ப வேண்டும் .எப்பொழுதும் போல ஒரு மணிக்கு எழுந்து விட்டோம் ..எனது மனைவி ரெடி பண்ணி கொடுத்த டீயுடன் கிளம்பினேன் .செல்வா அவர்களை மூன்று மணிக்கு பிக் செய்து கொண்டு நிதானமாக காரில் ,மனதில் முழு வேகத்துடன் என்ன பண்ண வேண்டும் என பேசிக்கொண்டே ஐந்து மணி முப்பது நிமிடங்களுக்கு  ரங்கனந்திட்டுவில் இருந்தோம் .எங்களுக்கு முன்னாடி ஒரு 'ஆர்வக்கோளாறு' வரிசையில் இருந்தது. நாங்கள் இறங்கி படகுக்காரருக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தோம் .அவருக்கும் எங்களது ஆர்வம் புரிந்து இருக்கும் . ஏதோ ஒலி ..சர் பாரடைஸ் flycatcher ன்னே .இல்ல Tickel's flycatcher ன்னு சொன்னாரு சாரு .இருட்டில் காண முடியவில்லை. ஆர்வம் பொங்கியது இன்னும் ..

படகுக்கு பணம் செலுத்திவிட்டு கேமெராவை தயாராக்க ஆயுத்தமானோம் .செங்கமங்களாக விடிந்தது .படகுக்காரர் போலாமா என்றார் .நாங்கள் பின் தொடர்ந்தோம் .சார் grey hornbill ,... படகுக்கு செல்லுமுன் இது என்ன சத்தம் எங்களை வரவேற்பதற்கு காத்திருந்த நண்பன் Tickell's flycatcher..ஒலி எழுப்பி எங்களை ஆர்வமூட்டினான் .அங்கேயே நின்று அவரை பல கோணங்களில் எடுத்தோம் .எங்களின் முழு பயணத்திலும் எங்களை கவனித்தது Tickell's flycatcher.எத்தனை அழகான ஒரு பறவை .படகில் தொடங்கிய உடன் வரிசையாக Asian openbill, Euresian Spoonbill, Painted stork, Spot billed pelican ... அம்மாடியோவ்! எத்தனை பறவைகள் ..இதில ஒண்ணே ஒண்ண பெங்களூரில் தேடருதுக்குள்ள ..

இங்க என்னடான்னா எல்லாம் இங்கேயும் அங்கேயும் ... அதிலும் Spot billed peilcan பறக்கிறப்ப ஜுராஸிக்பார்க் படம் கடைசி காட்சி ஞாபகம் வந்தது . படகு செலுத்தும் நாகராஜ்  எல்லா விஷயங்களும் தெரிந்து வைத்திருந்தார் .எல்லா பறவைகளும் எப்பொழுது வரும் ,எது வலசை பறவை ,அதன் பழக்கங்கள் ,எந்த இடத்தில அதை பார்க்கலாம் என்று முழு விவரங்களும் எத்தனை அழகாக சொல்லியிருப்பார் தெரியுமா! river tern , Thick knee ...எல்லாம் புதுசு எனக்கு .

யார் இவர் நம்மிடம் இருந்து கொஞ்சதூரத்தில் நீந்தி செல்கிறார் ...யாரும் இல்ல ... நம்ம முதலையார் ..என்னது .முதலையா ?..ஒன்னும் பண்ணது சார் நம்மள விட்டு தள்ளியேதான் போகும் .எங்களுக்கு முன்னாடியே தெரிந்தாலும் ,கொஞ்சம் அல்லு கண்டுச்சு .

நம்ம uncommon மீன்கொத்தியின் அருகிலே சென்று படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது .Stork billed kingfisher கண்டது ஒரு ஆச்சரியம் .எங்களால் அதனை பதிவு செய்யமுடியவில்லை .ஆனால் கண்டோம் .

படகு சவாரி முடிஞ்சதும் ,சாப்பிடவெளியில் வரவேண்டும் .ஒன்பது மணிக்கு தயாராகவேண்டிய கேன்டீன் ரெடியாக வில்லை .திரும்பி பார்க் பக்கம் வந்து பறவைகளை தேட தொடங்கினோம் .ஐபிஸ் ..நாங்க பிளாக் ஹெட் ஐபிஸ்ன்னு நினைச்சோம் ..செல்வா அவர்கள் இது Rednaped Ibis ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் White browed fantail பேன் டைல் ...என்ன ஒரு அழகா தன்னோட சிறகுகளை விரித்து விரித்து ஒரு விசிறி போல் காண்பித்து ... கடைசியா பாரடைஸ் flycatcher .நாங்கள் கேன்டீன் வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பேசிக்கொண்டு இருந்தோம் .இப்ப நம்ம கண்ணுமுன்னாடி வந்தா எப்படி இருக்கும்ன்னு ..அதுபோலவே வந்தது ..என்ன வியப்பு ... திருப்பி பார்க்குக்குள் சென்றோம் ...அங்கே paradise flycathcer male brown ஹெட் .ஒரு அற்புதமான கிளிக் .. Tickell's flycatcher ம் பரடிசே flycatherum எத்தனை அழகாக எங்களை ஒரு விருந்தாளி போல் கவனித்ததாய் நான் உணர்ந்தேன் . இத்தனை நாள் நான் பெங்களுருவில் இருந்து உங்களை காண வரவில்லையே .எத்தனை தலைமுறைகளை நீங்கள் காத்திருந்திர்களோ ...

அத்தனை அழகையும் விட்டு செல்ல மனம் வராமல் ...நெடுந்தூரம் திரும்பினோம் அத்தனை பறவைகளின் ஆட்டோகிராபாய் எங்களின் போட்டோ பதிவுகள் .இது சொல்லும் பல கதைகள் நாங்கள் இதனை புரட்டிப்பார்க்கும் பல நாட்களில் ..

கார்த்திகேயன்









Thursday, March 21, 2024

கண்கள் தேடும் மீன்களை-உன் கண்கள் தேடும் என் கண்கள்


 கண்கள் தேடும் மீன்களை-உன் கண்கள் தேடும் என் கண்கள் 

சிங்கநாயக்கனஹள்ளி ஏரி அல்லது  ராஜனுகுண்டே   ஏரி : பெயர் உறுதி செய்யப்படவேண்டும் .

இது ஒரு பறவை ஆர்வலர் அல்லது இயற்கை ஆர்வலர் முனிஷ் என்னும் இளைஞன் மூலம் தெரிந்து கொண்ட இடம் .

நானும் , திரு செல்வாவும் இங்கே போன போது இரண்டு விதமான வழி இருந்தது .முதலில்  ராஜனுகுண்டே flyoveril இருந்து கீழிறங்கி உடனே திரும்பும் திருப்பத்தில் சென்றால் ஒரு கிராமம் .அதன் வீடுகளின் இடையில் செல்லவேண்டியிருந்தது .எனக்கு இந்த மாதிரி செல்வதெல்லாம் புதுசு .கொஞ்சம் சங்கடமாக இருந்தது முதலில் .பிறகு  சமாளித்து சென்றேன் .ஒரு வீட்டு பக்கத்தில் இருந்து வரப்பு மாதிரி ஆரம்பித்தது .காரை பார்க் செய்ய இடம் தேடினோம் .அங்கே நின்று கொண்டு இருந்த ஒருவரிடம் கேட்டோம் .அவர் வீட்டினருகில் நிறுத்த  உதவி செய்தார்.நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு புறப்பட்டோம் .அன்று பார்த்தது முதலில் gray wagtail .ஆனால் அன்று எனக்கு தெரியவில்லை .  green bee eaters பற்றி தெரிந்து கொண்டது அன்றுதான் .வழியில் நடுவில் ஒரு பெரிய ஆலமரம் .செல்வா அவர்கள் அங்கேயே நின்று எத்தனை ஒரு வளமான ஒரு மரம் .இதில் குறைந்தது பத்தில் இருந்து இருபது வரை பறவைகள் இருக்க கூடும் என்றார் .அவர் எதிர்பார்த்தது  ஆந்தையை .அதன் கண்கள் முக்கியமானது ஒரு போட்டோக்ராபரின் பார்வையில் .அன்று எங்களுக்கு வாய்ப்பு கிட்ட வில்லை.
ஆனால் அடுத்து காத்திருந்த அதிசயம்தான் Commmon Kingfisher (மீன்கொத்தி). அது பறந்து செல்வதே தெரிவதில்லை. அத்துனை சிறிய பறவை. அது அமர்ந்து மீனை தேடும் விதம். கழுத்து முன்னும் பின்னும் சென்று கண்கள் தேடும் அழகு. ஒரு தாவலில் மீனை பிடித்து எதிரான மரத்தில் அமர்ந்து மீனை முன்னும் பின்னும் அடித்து உண்ணும் விதம். Kingfisher with kill என்பார்கள். செல்வா மீன் மற்றும் மீன்கொத்தி இரண்டின் கண்களும் ஃபோட்டோ வல்
 வரவேண்டும் என்பார். என்னுடைய இன்ஸ்டாகிராமில் ஜப்பானிய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் எப்பொழுதும் common kingfisher ன் ஃபோட்டாக்களே பதி விடுவார்கள். அதேபோல் அற்புதமான பதிவிட வேண்டும். 

இன்னும் விரியும் கண்கள் இரையை தேடி. 

உங்களுடன்

கார்த்திகேயன்


எண்ணப்பறவை சிறகடித்து..!

தம்பி கார்த்தி,

Sunday, March 17, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..-3

 

தம்பி கார்த்தி,

இந்த திம்மசந்தரா ஏரி, இவ்வளவு பக்கத்தில் இருந்தாலும், நீ சொல்வதற்கு முன்னால்,  எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஏரிக்கு போன பிறகு, சில உண்மைகளை தெரிந்து கொண்டேன். எனது முதல் கருத்து தவறானது. அதாவது, இது இன்னும் மனிதனால் அதிகம் சீண்டப்படாத ஏரி என்று நினைத்தேன்.  ஆனால், பின்னர் தான் தெரிந்தது, மனுஷன், இதையும் விட்டு வைக்கவில்லை. வெளி நாட்டுப்பெண்மணி ஒருவரை வழியில் கண்டோம். தனது நாயுடன், காலை வேளையில் இந்த ஏரிக்கரையில் நடப்பது அவரது வழக்கமாம். அந்த அம்மா ஒரு திடுக்கிடும் தகவல் சொன்னார்கள். "வெடி வெடித்து இங்குள்ளவர்கள் பறவைகளை விரட்டி விடுகிறார்கள். முன்பெல்லாம் நிறைய பறவைகள் வரும். இப்ப எல்லாம் வரதே இல்லை" என்றார்கள். இருந்தாலும், நாம் ஓரளவுக்கு நிறைய பறவைகளைப்பார்த்தோம். இன்னும், ஏரி நன்றாகத்தான் இருக்கிறது. அழகான ஏரி. கிட்டத்தட்ட 60 பறவைகளை கணக்கெடுத்தோம். 

தம்பி, இப்பொழுது, பறவைகளின் பெயர் மாற்றம், உலகளவில் நடக்கிறது. இப்பொழுது சலிம் அலி அய்யா வந்தால், அவருக்கே ஒரே குழப்பமாக இருக்கலாம். நம்ம white throated kingfisher முன்பெல்லாம், white breasted kingfisher என்று சொன்னோம். எனது பழைய பறவை ஆர்வலர், ஈரோடு பரமசிவன் வேடிக்கையாக கடிந்து கொள்வார். என் பெயர், பரம சிவன் தான்,  நீங்க இஷ்டப்படி மாத்திகிட்டா, நான், ராமசாமி ஆக முடியுமா?  அதெல்லாம் முடியாது என்பார். அது அந்த பறவை மீது இருந்த ஈடுபாடு என்றுதான் கூறவேண்டும். இத்தனைக்கும் அவர் ஒரு MSc Botany, MPhil. பள்ளியின் தலைமை ஆசிரியர். அவரை, flora உலகத்திலிருந்து fauna உலகத்திற்கு அழைத்து வந்ததில், பெரும் பங்கு அடியேனைச்சேரும். 

சரி, இந்த ஏரிக்கு வருவோம். ஏரியின் மேற்குப்புறம் வயல் வெளிகள் ஏராளம். வடபகுதியில் அந்த இராஜகால்வாய் (கன்னடத்தில் இராஜகலுவே) எனக்கு எனது இளமைப்பருவத்தை நினைவுக்கு கொண்டு வந்து விட்டது. அப்போது திருச்சியில் நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். எனது நண்பன் பக்கத்து கிராமத்தில் இர்ந்து வருவான். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு நாள் அவனோடு வனது கிராமத்துக்குப்போனேன். அவனது தென்னந்தோப்பை அடுத்து அந்த அழகான கால்வாய். நான்கு அடி தண்ணீர் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்துது. அதில் படுத்துக்கொண்டிடுந்து விட்டு இளநீர் குடித்து கும்மாளம் அடித்தது நினைவுக்கு வந்து விட்டது. இந்த இராஜகால்வாயில் அதே சூழ்நிலை. தம்பி, இதே போல உள்ள ஒரு இராஜ கால்வாய்யை சீரமைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பது உனக்குத்தெரியும். ஆக, உடனே அதில் குதிக்க ஆசை. வயசாயிடுச்சே! உடல் ஒத்துழைக்க வேண்டாமா? அப்புறம், அந்த  சப்போட்டா பழ மரங்கள் ! ஆஹா, காய்த்துக் குலுங்கும் சப்போட்டா பழங்கள் அருமை. ரம்மியமான சூழல். ஏரியின் வ மற்றும் கிழக்குக்கறைகளில், பண்னை வீடுகளும், திராட்சைத்தோட்டங்களும் வந்து விட்டன், இது சற்றே கவலை அளிக்கிறது. மீண்டும், இந்த ஏரிக்கு வரவேண்டும் 

இந்த வாய்ப்புக்கு நன்றி!

செல்வா


திம்மச்சந்திரா : எங்கெங்கு காணினும்

 திம்மச்சந்திரா : எங்கெங்கு காணினும் 


எங்கு செல்வது இந்த வாரம் என எண்ணி கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு புதிய இடமாக தேடி செல்லும் முனிஷிடம் கேட்கலாம் என தோன்றியது. நான் அதுவும் குறிப்பிட்டு எலகங்கா பக்கத்தில் என்றேன். உடனே பதில் வந்தது. திம்மச்சந்திரா என்று. 

நான் செல்வா அவர்களிடம் கேட்டதும் உடனே போகலாம் என்றார். அவரின் ஆவலும் புதிய இடங்களை தேடி செல்ல வேண்டும் என நினைக்கும் எண்ணங்களும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நானும் செல்வா அவர்களும் ஆர்வக்கோளாரில் ஆறு மணிக்கு சென்று விட்டோம். நல்ல இருட்டு. ஒரு சுற்று ரோட்டில் சென்று வந்தோம். எந்த திருப்பத்தில் செல்லவேண்டும் என தெரியவில்லை. பெட்வேல்டு பக்கம் என முனிஷ் கூறியது ஞாபகம் வந்தது. ஒரு பெரிய மரம். பக்கத்தில் சிறிய சரிவு. . கார் உள்ளே செல்லுமா என சந்தேகம். எப்படி யோ இறங்கி விட்டோம். அங்கு யாரும் இல்லை. ஒரு சிறிய பாதை. நான் இறங்கி சிறிது தூரம் சென்று பாதை ஏதும் தென்படுகிறதா என்று சென்று பார்த்தேன். ஏரியும் தென்பட்டது. ஒரு வழியாக பார்க் செய்து விட்டு வந்தோம். 
புதிய இடங்களுக்கு செல்கையில் இது ஒரு சவால். உள்ளே சென்ற உடன் பார்த்தது Rosy Starling குழுமங்கள். பின்னர் பர்ப்பில் கெரான்.செந்நாரை அல்லது செந்நீலகொக்கு‌ இதன் தமிழ் பெயர். அதன் நீளமான கழுத்தும் அதன் மெதுவாக சிறகடித்து பறக்கும் விதமும் தனித்துவமே. திம்மசந்திராவில் ஒரு ஆறு போல் தண்ணீர் காணப்பட்டது.மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மறுபடியும் நமது uncommon kingfisher -மீன் கொத்தி .இந்த முறை இருவரும் அதன் பக்கத்தில் நின்று அதனை படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .என்ன ஒரு அழகு . அதன் பக்கத்தில் நீரில் ஏதோ சலனம் பார்த்துக்கொண்டு இருந்தோம் .தவளையின் நகர்தல் .
அன்று பார்த்தது ஜாக்கோபின் குக்கூ ,வைட் த்ரோட்டு கிங்பிஷர் .தமிழில் வெண்தொண்டை மீன்கொத்தி. இதன் ஒலி எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.இதனை விச்சிலி அல்லது சிச்சிலி எனவும் அழைக்கிறார்கள் . இதனை நெடுநாள் புட்டெனஹள்ளியில் தேடி ஒருநாள் பிரேக் எடுக்கையில் என் எதிரில்வந்து எப்படிவேனாலும் போட்டோ எடுத்துகொள் என அது கொடுத்த எல்லா வாய்ப்புகளிலும் நான் எடுத்த படங்கள் அற்புதாமாகி என்னிடம் உள்ளது.அதனலாவோ என்னவோ இப்ப அதன் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து போயிருந்தது .இப்பொழுதெல்லாம் common kingfisher எனப்படும் மீன்கொத்தி அல்லது சிரல் எனப்படும் சின்ன ஊதா மீன்கொத்தியை போட்டோ எடுப்பதிலும் பொரி மீன்கொத்தி அல்லது வெள்ளை மீன்கொத்தி அல்லது கரும்புள்ளி மீன்கொத்தி ஏற்ப்படும் Pied kingfisher தேடுவதிலும் மனம் செல்கிறது . இந்த மூன்று மீன்கொத்தி மட்டுமே  உள்ளதாய்  நினைத்த எனக்கு 116 வகைகள் இருப்பதாகவும் இருபத்து எழு மில்லியன் வருடங்கள் முன்பிருந்து அவைகள் இருப்பதாகவும் தெரிந்துகொண்டது ஆச்சரியமான விஷயமே . 

அடுத்த ஆச்சரியம் !
பொரி உள்ளான்  எனப்படும் பொரி மண்கொத்தி ஆங்கிலத்தில் Wood Sandpiper எனும் ஒரு வலசை பறைவையை உற்றுநோக்கி கவனித்தது. திம்மசந்திராவில் தான். செல்வா அவர்கள் அதன் பல வகைகளையும் அதை எப்படி கண்டுகொள்வதையும் பற்றி கூறியது இந்த இயற்கை உடனான நடையில் ஒரு மயில் கல் .  திம்மசந்திரா ஒரு அமைதியான ஒரு ஏரி .மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதி .எல்லாரும் ஒரு முறையாவது சென்றுவரவேண்டும் .நாங்கள் அந்த நல்ல எண்ணத்தில் எங்கள் குழுவை மற்றுமொரு ஒரு வாரத்தில் அழைத்ததும் அது nature வாக்கில்`இருந்து எப்படி பிக்கினிக்காக மாறியது என்பது செல்வா சாரிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் .

மீண்டும் தேடுவோம் நம்மை தேடும் ஒரு பறவையை தேடி !

கார்த்தி



Sunday, March 10, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..! -2








தம்பி கார்த்தி,

உண்மை தான். பருவ மழைக்கும் , குயிலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது. நமது இலக்கியங்களில், இதைப்பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டு நினைவுக்கு வரவில்லை. 

ஏற்கனவே நாமிருவரும் பல முறை சந்தித்திருந்தாலும், நமது இந்த பறவை நடைப்பயணம், நம்மை அருகெ கொண்டு வந்துள்ளது உன்மை தான். கிரீன் சர்க்கிள் என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனத்தை 23 ஆண்டிகளுக்கு முன் டெல்லியில் இருந்த போது துவங்கினேன். 2021 இல் பெங்களுரில் வசிக்கத்தொடங்கிய போது, அந்த அமைப்பை மீண்டும் அறக்கட்டளையாக மறு பதிவு செய்து எனது சூழல் பயணத்தை தொடர்ந்தேன். இது போன்ற நடைப்பயணங்களை நடத்துவது எனது வழக்கம்.  எனது பறவை ஆர்வம், 40 ஆண்டுகளுக்கும் அதிகமானது. அதைப்பற்றி பின்னால் கூறுகிறேன். 

ஆனால், ஏற்கனவே புத்தனஹள்ளி ஏரியில், உன்னை பலமுறை சந்தித்திருந்தாலும் மீண்டும் ஹரோஹள்ளி பயணத்தின் போது, உன்னை சந்தித்தது ஒரு பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். Jacobin cuckoo or pied crested cuckoo ஒரு அழகான பறவை. பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தாலும், இதை வட இந்தியாவிலும் வெய்யில் காலத்தில் காணலாம். பெண் பறவையைக்காண எனக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்க வில்லை. சற்றே மங்கலான மரக்கலரில் இருக்கும். காணக்கிடைத்தால், படம் பிடித்து விடுங்கள். Crest இருப்பதால், இதை தமிழில் கொண்டைக்குயில் எங்கிறார்கள் போலும். சின்ன நீல  மீன்கொத்தி (Now common kingfisher) சாதாரணமாக பார்க்க முடியாது, இருந்தாலும், நம்மைப்போன்ற பறவை ஆர்வலர்கள், அடிக்கடி பார்க்கும் பற்வை தான். இது மீன் பிடிப்பதே ஒரு அழகு தான். இது  நீரைக்கிழித்துக்கொன்டு குறி பார்த்து மீனைப்பிடிப்பதை பார்த்து தான், ஜப்பானியர், புல்லட் ரயிலின் முகப்பை வடிவமைத்தார்கள் என்பர். இதைத்தான் ஆங்கிலத்தில் BIOMIMICRY என்பார்கள். 

ஹரோஹள்ளி ஏரியிலும் இப்பொது தண்ணீர், வற்றிக்கொண்டிருக்கிறது.

தொடர்ந்து பறவை பார்ப்போம்.

செல்வா



பருவ மழையை குறிகாட்டுமா பறவை?

எனக்கு இதுதான் முதல் அதிகாரப்பூர்வமான புட் பிடித்தல் அல்லது புள் வலையிடு (Birding )  செல்வா அவர்களுடன் . நான் இதே வழியில் பலமுறை சென்று உள்ளேன் .ஆனால் இந்த ஏரி எனக்கு கண்ணில் பட்ட மாதிரி ஞாபகம் இல்லை.காலை ஏழு மணி Green Circle Nature walk (இயற்கை உடனான ஒரு நடை )என்று அழைப்பு வந்திருந்தது .இது பெங்களூரின் வடக்கு பகுதியில் இருக்கிறது .இதன் அருகில்தான் இஸ்ரோவில் பணிபுரிவர்களின் குடியிருப்புகள் உள்ளன.எலஹங்காவில் இருந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் பைக்கில் அல்லது காரில் செல்ல ஆகும் நேரம் .ஒரு ரயில் கிராஸ்ஸிங்கும் உள்ளது . நான் வீட்டில் இருந்து கிளம்பு அங்கு செல்கையில் ஒரு பத்து நிமிடம் நடை ஆரம்பித்து இருந்தது .அங்கு சென்ற உடன் தெரிந்தது அது ஒரு பூங்காவாக உருமாறி கொண்டு இருந்ததது .இந்த முதல் nature walk எனக்கு பறவைகளை பற்றி எப்படி தெரிந்துகொள்ளுவது என்பது முதல் பாடமாக இருந்தது .அதற்கு மேலாக Green circle குழுமத்தில் உள்ள சிலரது அறிமுகம் எனக்கு கிடைத்தது . நான் முதலில் கண்டது Jacobin pied cuckoo .முதன் முதலில் இந்த பறவையை நான் பார்க்கிறேன் .நான் வேகமாக சென்று செல்வா அவர்களிடம் கூறினேன் .அவர்தான் அதன் பெயரை எனக்கு கூறினார் .இது தமிழில் சுடலைக்குயில் அல்லது கொண்டைக்குயில் என அழைக்கப்படுகிறது .நமக்கு எல்லாமே குருவி இல்ல கொக்கு .அதிகபட்சம் சத்தம் நல்லா இருந்தா குயில்.இதுதான் நம் பலபேருக்கு பறவையை பற்றிய புரிதல் .நான் மெதுவாக அந்த புரிதலில் இருந்து விடுபடுவதை உணர ஆரம்பித்தேன் .இதில் ஒரு ஆச்சிரியம் இந்த பறவையின் வருகையானது நமக்கு சில தகவல்களை தருவதாய் நான் தெரிந்து கொண்டேன் .

அதைப்பற்றி கூறுமுன் ,செல்வா சார்ஐ சுற்றி பலர் ஏதோ தகவல்களை பரிமாறிக் கொண்டு இருந்தார்கள் .செல்வா சார் மீன்கொத்தி பறவையை பற்றி விளக்கம் கொடுத்துவிட்டு நீர்காகம்,கொக்கு ,வாத்துகளின் வகைகள் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் .இருவர் மட்டும் அந்த குழுவில் இருந்து தனியே வந்து என்னிடம் கேமரா மற்றும் லென்ஸ் பற்றி விவரம் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். திரும்பவும் நாம் விட்ட இடத்திற்கு செல்வோம் .இந்த கொண்டைக்குயில் என்ன நம்முடன் இயற்கையுடனும் என்ன ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது .இதன் வருகை பருவமழையின் வருகையை உணர்த்துமாம் .என்ன ஒரு விந்தை!

இந்த இயற்கை உடனான ஒரு நடையில் நான் மறக்க முடியாதது செல்வா சார் குறிப்பிட்ட  மீன்கொத்தி பறவையின் ஒரு வகையான Common Kingfisher .இதை அவர் uncommon என்றே குறிப்பிட்டார் .அதன் பொருள் பின் நாட்களில் நாங்கள் இருவரும் அதனை பலமுறை தேடி கண்டுபிடித்து படம் எடுத்தபோது புரிந்தது. விரியும் எங்கள் இறைக்கைகள் .பறப்போம் இன்னும் ஒரு புதிய பறவையை தேடி .

உங்களுடன் 

கார்த்திகேயன் 



Thursday, March 7, 2024

எண்ணப்பறவை சிறகடித்து..!













தம்பி கார்த்தி,

இரவு 2.45க்கு எழுந்தேன். வழக்கம்போல். ஏதோ ஒரு உந்துதல், தூக்கம் வரவில்லை. இன்று மார்ச்சு 8, மகளிர் தினம். என் பேத்தியின் பிறந்தநாள், முதல் வாழ்த்து நான்தான் சொல்லவேண்டும், அப்புறம் மறந்து விடுவேன், வாழ்த்தலாம் என அலைபேசியை எடுத்தேன். எப்போதும்  முதலில் குழு அல்லாத தனிப்பட்ட குறுஞ்செய்தி தான் கண்ணில் படும். உனது நெடுஞ்செய்தி ஆர்வத்தை தூண்டிவிட்டது. படித்தே ஆகவேண்டும் பறவை பற்றிய செய்தியாகத்தான் இருக்கும். ... எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. நீண்ட பயணத்தின் முதலடி. இந்த நள்ளிரவில் உன்னோடு என் பயணத்தை தொடருகிறேன், பறவைகளுக்காக, இயற்கைக்காக, இதோ... 69 வயதில் மீண்டும். ஒரு பறவைப்பயணம், இயற்கையை நோக்கி, எத்துனை காலம் பயணிப்பேன் என்று தெரியவில்லை, ஆனால் பயணிப்பேன்,  இப்போதும்,

எப்போதும், இயற்கையெய்தும் வரை... 

நீ எழுதும் ஒவ்வொரு கதையிலும் எனது குறிப்பு இருக்கும். இல்லை என்றால் என்னாசி இருக்கும். நீண்ட நெடும் பயணத்தை நீ தொடங்குகிறாய், புகைப்பட ஆர்வம், பறவை ஆர்வம், இயற்கை ஆர்வம் என நான் 50 வருடத்திற்கு முன் தொடங்கிய அதே இலக்குடன்... என்னை சுற்றுச்சூழல் - ஆர்வலனாக மாற்றிய லாப்லிங் பறவை, உன்னையும் அழைக்கிறது, 'Did he do it, will he do it. என்று  ஏங்கி ! ஏனோ நான் மற்ற பறவை ஆர்வலர்களுடன் அதிகம் ஒட்டுவதில்லை. அவர்கள் வெறும் பொழுது போக்குக்காக பறவை பார்ப்பவர்கள். லாப்லிங் பறவையின் (Red Wattled Lapwing) அறைகூவல் அவர்களை பாதிக்கவில்லை. சலீம் அலி ஐயா இந்த பறவையின், மேலே சொன்ன ஒலியைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அது என்னை வெகுவாக பாதித்தது. முதன்முதலில் நான் பார்த்த வாக்டெய்ல் (Wagtail) வெறுதே வாலாட்டவில்லை.. தாலாட்டியது. நிறங்கள்.... என்னை மரங்களிடம் அழைத்து சென்றது. இதோ இன்று சுற்றுச்சூழலாளராக நான்....  சென்ற ஆண்டு நட்ட மரங்கள் பெங்களூரின் வரலாறு காணாத வரட்சியில் வாடுகின்றன. தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். Rosy Starling, அல்ல அல்ல, ரோசி டார்லிங்க்  மீண்டும் மீண்டும் வரவேண்டுமே!

சரி, இனி உனது ஒவ்வொரு பயணக் கட்டுரைக்குப் பின்னும் எனது வாழ்க்கை அனுபவங்கள் பின்னுரையாக மலரும். உன் எண்ணச் சிதறல்களுக்கு மணம் சேர்க்கும், பூவோடு, உன் பூவோடு சேர்ந்த நாராக...இனி நான், 'எண்ணப்பறவை சிறகடித்து' என்ற இணைப்புடன் உன்னுடன் பயணிப்பேன், முடியும் வரை... 

சரி சரி மறந்துவிடுவேன் பேத்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் அந்த அவடவட்(Red Avadavat) பறவை படத்துடன். (சென்றவாரம் ரசித்தோமே அதே தான்) 

செல்வா 



பறவை ஆர்வலர் செல்வா சாரும் நானும்

ஒவ்வொரு வாரமும் எங்களது தேடல் பறவைகளை நோக்கி அதிகமாகிக் கொண்டே இருந்தது.எதனால் பறவைகள் .பறவைகள் மட்டும்தானா? இல்லை வேற என்ன இலக்கு என்ற கேள்விகளுடனே நாங்களும் தொடங்கியிருப்போம்  இந்த ஆறுமாத காலத்தில் எத்தனை இடங்களை நாங்கள் பார்த்தோம் ,எவ்வாறு சென்றோம் என எங்களது அனுபவங்களை பற்றி எழுதலாம் என திரு.செல்வா அவர்கள் கூறிய பொழுது எனக்கு முழு ஆர்வம் தொற்றிக் கொண்டது . 

எங்களது நட்பு புட்டேனேஹள்ளியில் இருந்து தொடங்கியது .திரு .செல்வா அவர்கள் முதன் முதலில் பேசியது பறவைகளைப்பற்றி மட்டுமே .எனது போட்டோகிராபி ஆர்வத்தை கண்டு அவர் என்னை பிற எரிகளுக்கும் அழைத்து செல்வதாய்  கூறியதும் நான் இன்றும் நினைவில் வைத்துள்ளேன் .ஒரு உள்ளுணர்வு உணர்த்தியதாய் செல்வா அவர்கள் பின்னாளில் என்னிடம் கூறியதையும் நான் இங்கு குறிப்பிடவேண்டும் . ஆனால் ஓராண்டு காலம் கழித்துதான் எங்களால் இணைந்து செயல்பட முடிந்தது .செல்வா அவர்கள் என்னை க்ரீன் சர்க்கிள் குழுவில் இணைக்கும் போதும்  அதைத்தொடர்ந்து பெங்களூரின் பிற பறவைகள் ஆர்வலர்கள் குழுவில் சேர்த்தபோதும் என்னை ஒரு போட்டோக்ராபராக மட்டுமல்லாது ஒரு பறவைகள் ஆர்வலர் என்றே குறிப்பிட்டு உள்ளார் .நான் போட்டோக்ராபிக்ஹ்ர் கம் பறவைகள் ஆர்வலராய் மாறியது அப்படித்தான் . இன்று என்னை சுற்றி பலரும் பறவைகளை பற்றி பேச ,தெரிந்துகொள்ள ஊன்றுகோலாய் இருந்தது செல்வா அவர்களின் தொலைநோக்கு பார்வையும் அடுத்த சந்ததியினர்க்கு  கொடுக்கவேண்டியதை சரிவர செய்யவேண்டும் என துடிக்கும் அவரது எண்ணங்களுமே .

திரு.செல்வா அவர்கள் தனது பறவைகள் உடனான பயணத்தை தனது இளைமை வயதிலே தொடங்கியதும்.,இத்தனை வருடகால அனுபவங்களும் ,ஒரு எழுதப்படாத புத்தகமாய் நான் பார்க்க ஆரம்பித்தேன்.எனது பயணம் அவருடன் தொடங்கியது கிருஷ்ண சாகரில் .அன்றிலிருந்து நான் பறவைகளை வேறொரு கோணத்தில் பார்க்கத்தொடங்கினேன். இந்த பரபரப்பான உலகில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சோர்ந்து போகும் நம் உடல் ,மனங்களின் அத்தனை வலியையும் நீக்கும் மருந்து நமது வேட்கை ,ஆர்வத்திடம் .ஆங்கிலத்தில் Passion என்பார்கள் . ஆனால் எந்த ஒரு வேட்கையும்,ஆர்வமும் மகிழ்ச்சியை தர வேண்டும்.ஒவ்வொருவரும் அவர்களது ஆர்வத்தையும் ,வேட்கையும் கண்டறிய  வேண்டும் .ஆனால் அது மகிழ்ச்சி தருவதாய் இருக்கவேண்டும் .நாங்கள் இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் எங்களது பயணத்தை தொடங்கியிருந்தாலும் இந்த ஆறு மாத கால பயணமானது எனக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்தது .இந்த காலகட்டங்களில் நாங்கள் கண்ட பலவிதான பறவைகள் ,மனிதர்கள் ,அவர்களுடனான எங்களது அனுபவங்கள் பற்றி வரும் வாரங்களில் எழுத உள்ளோம் .எங்களுடன் சக பயணிகளாய் பறந்து திரிந்து பறவைகளையும் அது சார்ந்த இயற்கையையும் எங்களுடன் சேர்ந்து ரசிப்போமா .தொடங்குங்கள் உங்கள் பயணத்தை.

கார்த்திகேயன்



கூண்டுக்கிளி

கார்த்தியின் கூண்டுக்கிளி, செல்வாவின் ஜோதிடக்கிளியுடன் பேசுகிறது நான்  கொஞ்சம் புண்ணியம் செய்தவன் தான்!  ஆனால் அதோ அங்கே  நண்பா நீ, அந்தோ......